சென்னை: இந்தியாவில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை செய்து வருவதாகவும்; ஆகவே, மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் (SDPI) சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது புகார்: அந்த புகார் மனுவில், "கடந்த 21ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் தேர்தல் பரப்புரையின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கிட்டு கொடுத்துவிடும்.
மேலும் ஊடுருவல்கார்களுக்கும், குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்பவர்களுக்கும் உங்கள் சொத்துக்கள் பகிர்ந்து அளிக்கப்படுவதை அனுமதிக்கப் போகிறீர்களா? என்று பரப்புரை செய்தார். இந்த வீடியோ நாடு முழுவதும் தொலைக்காட்சி செய்தித்தாள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது.
ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பல தவறான தகவல்களைப் பரப்பி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் மத பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கத்தோடும், இரு சமூகங்களுக்கும் இடையே மத மோதல் உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்திலும் காழ்ப்புணர்ச்சியில் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பொது அமைதியை காக்குமாறும் காவல்துறை மூலமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்படியும்" அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மோசடி புகார்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதனை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முத்து செல்வம் என்பவர் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், பத்து மாதங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரமாக திருப்பித் தரப்படும் என கவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டது.
இதனால் பணம் குவிய தொடங்கியது. இந்த நிலையில் 2022 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பணம் செலுத்திய யாருக்கும், லாபத்தொகை தரப்படவில்லை. அசலும் திருப்பித் தரப்படவில்லை. பின்னர் இதனால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முத்து செல்வத்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். தற்போது முத்து செல்வம் ஜாமீனில் வெளியே வந்து விட்டபோதும், தங்களுக்கு எந்த எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும், இவ்விவகாரத்தில் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் டிஜிபி சங்கர் ஜுவாலை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், புகார் மனுவை ஏற்க மறுத்த டிஜிபி பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்று புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர், "பல நூறு கோடி ரூபாயை இந்நிறுவனம் மோசடி செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறது. எனவே, அதை மீட்டுக் கொடுக்க வேண்டும்' என்றார். மேலும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 15 பேர் பங்குதாரர்கள். இவர்களில் பலர் ஆளுங்கட்சி வி.ஐ.பிக்களுடன் தொடர்புடையவர்கள். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகிறார்கள் என உடனிருந்த பலரும் குற்றம்சாட்டினர்.
பிறகு சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனுவை அளித்தனர். அதில், மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: இன்று வானில் தோன்றவுள்ள 'பிங்க் நிலவு' - சிறப்பம்சங்கள் என்னென்ன?