கோயம்புத்தூர்: கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர் வால்பாறைக்கு சுற்றுலா சென்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அக்சத் ஹர்சானா (20), ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுபித் (21). இவர்கள் இருவரும் கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தங்கி பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கல்லூரி விடுமுறை என்பதால் அக்சத் ஹர்சானா, சுபித் மற்றும் சரண்ஸ் குமார் ஆகிய 3 பேர் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல கோவை ரயில் நிலையம் சென்று, அங்கு வாடகைக்கு இரண்டு இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு வால்பாறைக்குச் சென்றுள்ளனர். இதில் இரு வாகனத்தில் சபித், அரஷத் ஹர்சானா இருவரும் மற்றொரு வாகனத்தில் சரண்ஸ்குமார் சென்றுள்ளார்.
இவர்கள் கிணத்துக்கடவு பகுதியை கடந்து கோதவாடி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னே நின்றிருந்த மற்றொரு காரின் பின்பகுதியில் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபிக், அக்சப்ட் ஹர்சானா இருவரும் தூக்கி வீசப்பட்டு நான்கு வழிச்சாலையில் கீழே விழுந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கனிஷ்கான் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திண்டுக்கல் நோக்கிச் சென்றுள்ளார். அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து டெல்வின் என்பவர் அவரது நண்பருடன் தேனி நோக்கி சென்றுள்ளார். இந்த இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில் இரு கார்களில் பயணம் செய்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், கனிஷ்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த கனிஷ்கான் மனைவி மற்றும் குழந்தை உட்பட 4 நபர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து, தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருவனந்தபுரத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் அதிவேகமாகச் சென்றதால் விபத்து நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண்கள் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ.. சென்னையில் பெயிண்டர் கைது! - Cameras in Restrooms