திருநெல்வேலி: அடு வயிற்றில் உயிர் அழுக, தொடை துடி துடித்து உயிர் உறுப்பு வேறு உலகம் தேட, உயிர் வென்ற அவளுக்கு எளிதாக கொடுத்து விட்டார்கள் பட்டம் 'தீட்டு' என்று எங்கோ ஒருவர் எழுதிவிட்டுச் சென்றது தற்போது நினைவுக்கு எட்டுகிறது. நம் வாழும் அதே உலகில் தான் பெண்களும் வாழ்கின்றனர், அவர்களுக்கென்று தனி உடல் செயல்திறன் உள்ளது என்று புரிந்து கொண்டாலே, மாதவிடாய் காலத்தில் இங்கு பலப் பெண்களின் ஏக்கமும், குமுறலும் நீர்த்துப்போகும்.
மாதவிடாயின் போது உடல் உபாதைகளால் சிரமப்படும் பெண்கள் அவர்களின் வலி கடந்து சமூகத்தின் அலட்சியப் பார்வையிலே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கூடுதல் அக்கறையும், ஆரோக்கியமும் எதிர்பார்க்கும் பெண்களின் மாதவிடாய் காலத்தில் வாசலில் அமராதே, பூஜை அறைக்குள் போகாதே, அதைத் தொடாதே, இங்கு போகாதே என்ற அதட்டல்களிலும் கண்டித்தலில் மட்டுமே இன்றளவும் பலப் பெண்கள் பயணிக்கின்றனர்.
முன்பொரு காலத்தில் இந்தக் கண்ணோட்டம் மட்டுமே இருந்திருந்தாலும் சகப் பெண்களின் உயர்வு, முன்னேற்றத்தினால் இன்றைய காலக்கட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. மாதவிடாய் குறித்து பெண் குழந்தைகளுக்கான புரிதல் மற்றும் அதன் அணுகுமுறையை தெரிந்துக்கொள்ள பாடங்கள், புத்தகங்கள், படங்கள் என பல வகையிலான மூல ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், மாதவிடாய் என்பது வெறுமென ஒரு தீட்டு அல்ல என்பதை உலகிற்கு எடுத்துரைக்க பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி சார்பில் மாணவிகளைக் கொண்டு மாதவிடாய் சின்னம் அமைக்கும் பிரம்மாண்ட உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி இன்று(பிப்.20) நடை பெற்றது.
இதையொட்டி சுமார் 5 ஆயிரம் மாணவிகள் கல்லூரியின் மைதானத்தில் ஒன்று திரண்டு மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப் போக்கை சித்தரிக்கும் வகையில் குழுவாக அமர்ந்தனர். மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய கல்லூரி பேராசிரியர்கள் மாதவிடாய் சமயத்தில் வேலைக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வேலை செய்யும் பகுதியில் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் வைப்பதை கட்டாயமாக்க வேண்டும். பொதுவெளியில் கடைகளில் மாதவிடாய் ஒன்று தீட்டு இல்லை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இது மாதவிடாய் நேரத்தில் பெண்களை ஒதுக்கி வைக்கிறோம்.
மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு சௌகரியமற்ற விஷயங்கள் எதையும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று(பிப்.21) இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மாதவிடாய் என்றாலே எல்லோரும் அசிங்கமாக நினைக்கிறார்கள். அது போன்று நினைக்க கூடாது.
அந்த காலத்தில் மாதவிடாய் நிகழ்வை அசிங்கமாக பார்த்தார்கள் தற்போது என்ன நடந்தாலும் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை உலகத்திற்கு காட்டுகிறோம்" என்றார். தொடர்ந்து, மாணவிகள் ரேணுகா மற்றும் சண்முகசுந்தரி கூறுகையில், "மாதவிடாய் நிகழ்வை அசிங்கமாக பார்ப்பதை தடுத்து இது ஒரு சாதாரண நிகழ்வு என புரிய வைப்பதற்காக இந்த உலக சாதனை முயற்சியை நிகழ்த்தி வருகிறோம்" என்றனர்.
அதைத்தொடர்ந்து பேசிய பேட்டை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி கூறுகையில், "ஒரு பெண்ணாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு மிகவும் பெருமை. பெண்கள் சாதாரண நாட்களை கடந்து செல்வதை போல் இந்த நாட்களையும் திறம்பட கடந்து செல்ல வேண்டும். இதனால் நாம் சோர்வாகக் கூடாது. உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருக்கிறோம். எனது காலத்திலும் அம்மா காலத்திலும் வீட்டில் இருக்கும் சக பெண்களிடம் மாதவிடாய் குறித்து சொல்வதற்கே கூச்சப்படுவோம்.
தற்போது அந்த நிலை மாற்றம் கண்டுள்ளது. எனவே பெண்கள் யாரும் இந்த விஷயத்தில் தயங்க கூடாது. இத்தனை ஆண்கள் மத்தியில் மாதவிடாய் குறித்து பேசுவதே பெரிய விஷயம் தான். பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாதவிடாயை தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது ஆற்றல் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மனசு தான் அனைத்திற்கும் காரணம். மனசை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாணவர்களின் படைபாற்றலை மேம்படுத்தும் 'பிரக்யான் தொழில்நுட்ப விழா' திருச்சி என்ஐடியில் நாளை தொடக்கம்!