விழுப்புரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் வானூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகளைச் சேகரிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை, வீட்டிலிருந்தவாறே அஞ்சல் வாக்குச் சீட்டின் மூலம் செலுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி, நடமாடும் அஞ்சல் வாக்கு சீட்டுக்குழுவினர் (Mobile Postal Ballot Team) ஏப்ரல் 4, 5, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை நேரில் அளித்து, அவர்கள் வாக்களித்த பின்னர் வாக்குச்சீட்டுகளை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டனர்.
அந்த வகையில், மேலே குறிப்பிட்ட நான்கு நாட்களில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (PwD) வாக்காளர்கள் வாக்களிப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்யும் பொருட்டு, கூடுதலாக இன்று (ஏப்.10) ஒருநாள் மட்டும், திண்டிவனம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதிகளில் அஞ்சல் வாக்குச்சீட்டு குழுவினர், விருப்பம் தெரிவித்த வாக்களர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
இதுகுறித்த விவரங்கள் மற்றும் நடமாடும் அஞ்சல் வாக்குச்சீட்டுக் குழுவினரின் விவரங்கள், தொடர்புடைய உதவி தேர்தல் அலுவலர்களிடம் உள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டு வாக்காளர்கள் பட்டியல் மற்றும் நடமாடும் அஞ்சல் வாக்குச்சீட்டு குழுவினரின் பணிகள் குறித்த விவரங்களை, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிந்துக் கொள்ளலாம்" என அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழக்கும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு! - Lok Sabha Election 2024