கோயம்புத்தூர்: கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பயிலும் மாணவர்கள் சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர், ஈச்சனாரி, சுந்தராபுரம், மதுரைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இன்று (செப்.28) தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதாவது, தனியாக வீடுகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: '40 ஆண்டு கால யானை தந்தம்'.. வறுமைக்காக விற்க முயற்சி.. கோவையில் 5 பேர் கைது!
தற்போது, கோவையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அதிகம் உள்ளதால், அடிக்கடி மாணவர்கள் சண்டை நடைபெற்று வருவதாக புகார்கள் வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, கஞ்சா, திருடப்பட்ட வானங்கள், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, 8 கல்லூரி மாணவர்களைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு ரவுடிசத்தில் ஈடுபடுதல் போன்றவை கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்