கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரசாத். இவர் செல்வபுரம் இந்து முன்னணி நகரத் தலைவராக உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, செல்வபுரத்தில் மீன் கடை நடத்தி வரும் அசாருதீன் என்பவர் தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி அசாருதீன் செல்போனை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அசாருதீனின் செல்போனை போலீசார் ஆய்வுக்குட்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதா எனச் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை முடிவில், செல்போனில் அசாருதீன் சூர்யபிரசாத்தை புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அசாருதீன் செல்போனை போலீசார் திருப்பி அளித்ததுடன், இது குறித்து சூர்யபிரசாத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சூர்யபிரசாத் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில், அவரிடம் விசாரானையைத் தீவிரப்படுத்தியதில், தனக்கு தனி போலீஸ் பாதுகாப்பு (PSO) வேண்டும் என்பதற்காக, ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்ததால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நாடகம் ஆடியது தெரியவந்தது.
மேலும், அசாருதீனை மிரட்டி செல்போனைப் பறித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அசாருதீன் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 153, 294 (b), 341, 504, 506 (ii) கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்மையில், சூர்யபிரசாத் கோயம்புத்தூர் ரயில் நிலையம் பகுதியில், இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதாக பந்தயச் சாலை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்! - Vijayakanth Memorial World Record