கோயம்புத்தூர்: கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நேற்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்: இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தேர்தலையும் நடத்தி இருக்கலாம். ஆனால் நடத்தவில்லை. தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளரை அறிவித்தது திமுக. ஆனால் பிரதான எதிர்க்கட்சி, 2 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்து இருக்கின்றது. இதற்கு "தேர்தல் நியாயமாக நடத்தப்படாது" என்று காரணம் சொல்கின்றனர்.
தேர்தலை நடத்தப் போவது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலுக்கு துணை இராணுவம் பயன்படுத்தப்படும் என சொல்லி இருக்கின்றனர். தேர்தல் புறக்கணிப்ப என அதிமுக அறிவித்து இருப்பதன் உள்நோக்கம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார். தேர்தலை புறக்கணிப்பதன் மூலமாக எதிர்காலத்தில் நீங்கள் (அதிமுக) எங்கு செல்லப் போகின்றீர்கள் என தெரிகின்றது. இந்த அபாயத்தை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.
சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: "கோவை மண்ணில் இந்த விழா கொண்டாடுவது மிக பொருத்தமானது. எப்போது வேண்டுமானால் மத்தியில் ஆட்சி கவிழும். தேர்தலை ஆணையம் முறையாக செயல்பட்டு இருந்தால் இன்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கும்.
நாடாளுமன்றத்தில் மோடி இனி வால் ஆட்ட முடியாது. அப்படிபட்ட வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. மதவெறி சக்திகளுக்கு முடிவு கட்டும் வெற்றி கிடைத்துள்ளது. சாதிய பாகுபாடு இல்லை, மதம் பாகுபாடு இல்லை இதை தாண்டி வெற்றி கிடைத்துள்ளது.
கோவை தொகுதி எங்களுக்கு வேண்டும் என்றோம். நீங்கள் திண்டுக்கல் எடுத்து கொள்ளுங்கள் என்றார். கோவையில் மாறுபட்ட சூழ்நிலை இருப்பதால், அண்ணாமலை என்ற நபர் வரும்போது அதை வேரோடு அகற்ற வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார். மகத்தான வியூகத்தை அமைத்து மகத்தான வெற்றி பெற்று இருக்கின்றோம். நம்முடைய எதிரணிஎங்கு இருக்கின்றது என தெரியவில்லை.
விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எடப்பாடியார் சொல்லி இருக்கின்றார். எடப்பாடியரை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டார்கள். 5 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியின் எந்த பிளவும் வராமல் பார்த்துக் கொண்டு மீண்டும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் தான்" என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருமாவளவன்: பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,"தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கின்றது. தென்னிந்தியாவில் அவர்கள் ஜம்பம் பலிக்காத ஓரே மாநிலம் தமிழகம்தான்.
திமுக தலைமையிலான தற்போது உள்ள கூட்டணி 4 தேர்தலை சந்தித்தபோதும் எந்த சலசலப்பும் இல்லை. இங்கே மழை கால தவளை போல ஒருவர் கத்திக் கொண்டே இருக்கின்றார். தாமரை மலரும்.. மலரும்... என்று சொல்லி கொண்டே இருக்கின்றார். ஆனால் வெற்றி உறுதி.. உறுதி... என ஸ்டாலின் பேசி கொண்டே இருக்கின்றார்.
காங்கிரஸ்காரர்களே தயங்கியபோது அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்று சொன்னவர் ஸ்டாலின். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என எடப்பாடி சொல்லிவிட்டார். திமுகதான் வெற்றிபெறப் போகின்றது. சாதிய மதவாத அரசியலுக்கு இடமில்லை என்பதற்கு உதாரணம் சிதம்பரம். இந்தியா கூட்டணியை இன்னும் வலுமைப்படுத்த வேண்டி இருக்கின்றது" என தெரிவித்தார்.
காதர் மொய்தீன்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது, "திமுக தலைவர் கலைஞர் எழுதிய உயிலின்படி திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகின்றார் முதலமைச்சர் முக.ஸ்டாலின். ஸ்டாலின் பிரச்சாரத்தால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் தேர்வு செய்துவிட்டனர். கலைஞருக்கு பாரத ரத்னா பட்டத்தை வழங்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: ஆர்டிஐ எனும் சாமானியனின் வஜ்ராயுதம் - சாதித்தது என்ன?