கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் 14வது ’டெக்ஸ்ஃபேர்’ சர்வதேச கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இதில் ஜவுளி இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியானது, இன்று ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியைப் பார்வையிட நுழைவு கட்டணம் இல்லை.மேலும் இந்த கண்காட்சி மூலம் ஆயிரத்து ஐந்நூறு கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என சைமா அமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது குஜராத், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய வெளி நாடுகளிலிருந்தும் ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த கண்காட்சியில் 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பார்கள் சேர்ந்து மொத்தம் 260 அரங்குகள் அமைத்து பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த கண்காட்சியை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தினர்கள் தற்போது பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வழங்கியுள்ளனர், முன்பெல்லாம் கோவையில் எவ்வளவு செழிப்பாக நூற்பாலைகள் இருந்ததில்லை ஆனால் தற்போது இந்த துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இது தொடர்ந்து நடைபெறுவதற்கு அரசாங்கத்தின் உதவி தேவை எனச் சங்கத்தினர் கூறினார்கள். இது குறித்துக் கண்டிப்பாகப் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் பேசி இந்த துறைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை நிச்சயமாகச் செய்வோம். மேலும் பொலிவிழந்து வரும் இந்த நூற்பாலை தொழில் உதிரிப்பாகங்கள் தொழிலை மீட்டெடுக்கக் கண்டிப்பாகத் தமிழக அரசு ஒத்துழைப்பு தருவோம். மேலும் இவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 'பிங்க் ஆட்டோ' - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!