கோயம்புத்தூர்: யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பேசியபோது, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கரை கடந்த மே 14ஆம் தேதி கைது செய்தனர்.
இதேபோல் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது சேலம், திருச்சி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல், தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கோவை மத்திய சிறை மற்றும் திருச்சி சிறைகளில் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதி சரவணபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் டெல்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மௌலி என்பவர் ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்!