கோயம்புத்தூர்: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோயில் முன்பாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(NIA) அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இன்று கோவையில் முகாமிட்டனர்.
அப்போது இன்று மாலை சுந்தராபுரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் இருந்து மூன்று இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்தனர். அரபிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த அபூ ஹனிபா என்பவரும், அவருடன் பவாஸ் ரஹ்மான் மற்றும் சரண் மாரியப்பன் என்பவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: நாவரசு கொலை வழக்கு; ஜான் டேவிட் மனுவை மீண்டும் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு!
கைது செய்யப்பட்ட இவர்கள் தாக்குதலை நிகழ்த்திய ஜமிஷா முபீனுக்கு பொருளாதார உதவி செய்துள்ளதுடன், ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களையும் புகுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், அவர்களை சென்னை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் மூன்று பேரையும் நாளை காலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை கார் குண்டுவெடிப்பில் இன்று மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் நடைபெற்று சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கூடுதலாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்