திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடி பேருந்து நிலையத்திற்கு வந்த தடம் எண்-120 E என்ற அரசு பேருந்தின் பின் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு தினமும் தடம் எண்-120 E மற்றும் 61 E பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடி பேருந்து நிலையத்திற்கு தடம் எண்-61 E பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றது. அப்போது, பேருந்தில் ஓட்டுனர் உமாபதி மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் பணியில் இருந்தனர். அந்த பேருந்து ஆவடி பேருந்து நிலையம் வந்த போது, பேருந்திலிருந்து இறங்கிய பள்ளி மாணவர்கள் சிலர் அங்கிருந்த கல்லை எடுத்து பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம், தடம் எண்-120 E பேருந்தில் பள்ளி மாணவர்கள் புட் போர்டு அடித்தபடி, பாட்டு பாடி அட்டகாசத்தில் செய்து வந்துள்ளனர்.
தொடர்ந்து இதே பேருந்தில் அந்த மாணவர்கள் வருவதால் ஓட்டுநர், நடத்துடன் ஆகியோர் அவர்களை கண்டித்தால் பிரச்னை வரும் என்பதால் அவர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் அந்த மாணவர்களை கண்டித்ததாகத்தெரிகிறது. பின்னர் அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆவடி போலீசார் பேருந்திற்கு சென்று சில மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும், அதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது போல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் அட்காசம் செய்யும் புகார் எழுந்த வண்ணம் உள்ளதால், அதிக பயணிகள் செல்லும் நேரம் அதாவது ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் ஆவடி போலீசார் ரோந்து பணியை துரிதப்படுத்த வேண்டும், பள்ளிகளுக்கும் போலீசார் அறிவுறுத்த வேண்டும் என்றும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.