கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரில் இயங்கும் உணவகம் அன்னபூர்ணா ஹோட்டல். இந்த குழுமத்தின் தலைவராக இருப்பவர் சீனிவாசன். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோவை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஜிஎஸ்டி குறித்து பேசும்பொழுது பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது எனவும், உள்ளே வைக்கின்ற க்ரீமுக்கு ஜிஎஸ்டி இருப்பது குறித்து பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், பாஜகவினர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலானதால், இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க : நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு.. "இரவு முழுவதும் தூக்கமே இல்லை" என வேதனை - annapoorna srinivasan
இந்நிலையில், வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளம் மூலம் மன்னிப்பு கோரினார். ஜிஎஸ்டி பிரச்னையால் பன்னும், க்ரீமும் தேசிய அளவில் பேசுபொருளான நிலையில், இன்று மாலை அன்னபூர்ணா குழுமம் புதிய விளம்பரம் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் பன்னும், கிரீமும் இடம் பெற்றிருந்தது. அத்துடன் GST, ஸ்டாண்ட் வித் அன்னபூர்ணா, நிர்மலா சீதாராமன், பைனான்ஸ் மினிஸ்டர் என்ற ஹேஷ் டேக்குகளும் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சில மணி நேரம் கழித்து அந்த பக்கத்தில் இருந்த ஹேஷ்டேக்குகளை நீக்கி விட்டு, கீரிம் + பன் = கீரிம் - பன் என்று குறிப்பிட்டு அன்னபூர்ணா கோயமுத்தூர் என்ற ஹேஷ்டேக்குகளை மட்டும் பதிவிட்டுள்ளது.