கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு சார்பிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்கு (VOTE) என்பது எவ்வளவு முக்கியத்துவமான ஒன்று, அதன் மதிப்பு என்னவென்று கோவை அரசு கலைக் கல்லூரியின் தேர்தல் அறிவியல் பிரிவின் பேராசிரியரான முனைவர் கனகராஜ் கூறுகையில், "வாக்கு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. மக்களாட்சி முறையில் மக்களின் செல்வாக்கு என்பதே மக்களின் வாக்குகளாகத்தான் வருகிறது.
மக்களாட்சியில் ஆணி வேராக இருப்பது, குடிமக்களின் வாக்குகள். இந்த வாக்குகளை விலைக்கு விற்கக் கூடாது. வாக்குகள் என்பது வணிக பொருள் அல்ல, அரசியல் அமைப்பின் ஆத்மா. நம் முன்னோர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாக்குரிமை இல்லை. வாக்குரிமையின் மதிப்பை பணத்தால் அளவிட முடியாது. அனைவரும் அரசியல் அமைப்பிற்கு உண்மையாக இருந்தால், நம்முடைய நாடு கூடிய விரைவில் முன்னேறிய நாடாக மாறி விடும்.
அப்படிப்பட்ட முன்னேறுகின்ற விஷயத்தை தடுக்கக் கூடிய வகையில், ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் இருக்கிறது. புற்றுநோய் போல் மிக மிக ஆபத்தானது நமது வாக்குகளை விற்பதாகும். முதல் தேர்தலாக அமையக்கூடிய இளைஞர்கள், இந்த வாக்குரிமையைச் செல்வாக்காக கருதி, வாக்கு செலுத்த வேண்டும். இளைஞர்கள் சிந்தித்து, பொறுப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். முதலில் அந்த தொகுதியின் வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அக்கட்சியின் தத்துவங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். பல நாடுகளில் இளைஞர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால், நம் நாட்டு இளைஞர்களுக்கு உள்ளது. எனவே, அனைவரும் அவர்களது வாக்கைச் செலுத்த வேண்டும். இந்தியாவிலிருந்து பல கோடி பேர் அயல்நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அப்படி சமீபத்தில் சென்றவர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை உள்ளது. எனவே, அவர்கள் அவர்களது வாக்குரிமையைக் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
தாய்நாட்டிற்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை அது. வாக்களிப்பது என்பது நமது தார்மீக கடமை. அதனைச் செய்ய வேண்டும். எனவே, வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கிருந்தாலும் தாயகம் வந்து, அவர்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஓட்டுக்குப் பணம் வாங்கினால் எத்தகைய தண்டனை நமது சட்டத்தில் உள்ளது என்பது குறித்துக் கூறிய வழக்கறிஞர் சண்முகம், "ஜனநாயக நாட்டில் ஆத்மா, புனிதம் எது என்றால், அது தேர்தல்தான். மக்கள் அவர்களது வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக அமரச் செய்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் மாஸ்டர்களாக மாறிவிடுகின்றனர். மக்களுக்கு அவர்களின் சக்தி என்னவென்று தெரியாமல் போய்விடுகிறது. தேர்தல் என்றால் பணம் ஏதேனும் கிடைக்குமா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அதற்கு பொருளாதாரச் சூழல் என்று காரணம் கூறினால், அந்த நிலையில் மக்களை வைத்தது யார்? ஓட்டுக்காக பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் குற்றம் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது. ஓட்டுக்காக பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ, இந்த கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டும் என்று நிர்பந்தித்தாலோ, சாமி முன்பு சத்தியம் ஏதேனும் வாங்கினாலோ இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறை தேர்தல் இருந்துள்ளது. அதற்கான சான்றுகளும் வரலாற்றில் உள்ளது. மக்களாட்சியில் மக்களுக்கு இருக்கின்ற அதிகப்படியான உரிமை தேர்தல்தான். தேர்தல் நாளன்று விடுமுறை நாள் தானே என இருந்து விடக்கூடாது. என் ஓட்டு விற்பனைக்கு அல்ல எனக் கூற வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கி மாட்டிக் கொண்டால், அதன் மூலம் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் என ஓட வேண்டி இருக்கும். அது வாங்கிய பணத்தை விட அதிகம். பணம் மட்டுமல்ல பொருட்களாக வாங்கினாலும் குற்றம்தான்" எனத் தெரிவித்தார்.