சென்னை: காஞ்சிபுரம் வேட்பாளர் க. செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர். பாலு ஆகியோரை ஆதரித்து இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை பெசன்ட் நகர் பொதுக்கூட்டத்துடன் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (திங்கட்கிழமை) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வடசென்னையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, பொதுமக்களைச் சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
மேலும், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் க. செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர். பாலு ஆகியோர் ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நாளை (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் நாளை பெசன்ட் நகரில் கூட்டத்துடன் தனது பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது: உதயநிதி ஸ்டாலின் உறுதி! - Lok Sabha Election 2024