சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜூலை 29) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024- ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூகநல ஆணையர் அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைச் செயலாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை சந்தியா தேவி, "23 வருடமாக கிராமிய வில்லுபாட்டை பாடி வருகிறேன். 2024 ஆம் ஆண்டு சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வர் உதவியால் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. திருநங்கைகளுக்கான உயர்கல்வி செலவை ஏற்பது திருநங்கைகளுக்கான உதவித்தொகையை ஆயிரத்தில் இருந்து 1500 ஆக உயர்த்தி வழங்குவது, மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் , கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படுவது என திருநங்கைகளுக்கான நிறைய உதவிகளை அரசு செய்து வருகிறது.
திருநங்கை சமூகம் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிற நிலையில் திருநங்கை சமூகம் இதை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் திட்டங்களால் பயன்பெற வேண்டும். வருங்காலத்தில் திருநங்கைகள் எல்லா துறையிலும் சிறந்து வளர வேண்டும்'' என்று திருநங்கை சந்தியா தேவி கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு 50வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! ஆகஸ்ட் 5 இல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை