விழுப்புரம்: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இக்கட்டிடதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில், 31 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயர் அழுத்த மும்முனை மின் இணைப்பு, உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவைத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, மு க ஸ்டாலின் இக்கட்டடத்தின் முதலாவது இட ஒதுக்கீடு ஆணையைத் திருவாளர்கள் SUV Startup Space நிறுவனத்தின் நிர்வாகி எஸ். யுவராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!