கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா எனவும், பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளியங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்தனர்.
மேலும், இக்குழுவினர் நேற்று வேன் மூலம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது, அங்கிருந்த ஈஷா யோகா மைய ஊழியர்கள், ஈஷா ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்மைக் கண்டறியும் குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்காமல், சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை வைத்து தடுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆலாந்துறை போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஈஷா ஆதரவாளர்கள் உண்மைக் கண்டறியும் குழுவினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இரு தரப்பினரும் ஆலாந்துறை காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!