கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனிடையே, நாளை (சனிக்கிழமை) முதல் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல், தண்ணீரையும் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கண்ணப்பன் நகர் சிக்னலில் இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: AC இல்லாம வீட்ட கூலா வைக்கனுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பன்னுங்க.!
மேலும், முதற்கட்டமாக கோவை மாநகரில் 10 இடங்களில் இந்த பந்தல் அமைக்க உள்ளதாகவும், தேவைக்கேற்ப வரும் காலங்களில் விரிவுபடுத்த உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "மாநகராட்சியின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்த வேண்டும்" என வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது போன்று பந்தல் அமைப்பதெல்லாம் கோமாளித்தனமான வேலை. பின்வரும் காலங்களில் பசுமையைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள முக்கிய சிக்னலில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு, அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொளுத்தும் வெயில்.. கோடைகால தீ முதல் கேஸ் சிலிண்டர் வரை.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?