சென்னை: தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட வேண்டிய சிறப்புப் பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சிஐடியு பொறுத்தவரையில், பொதுமக்களின் பிரச்னை எதுவும் அவர்களுக்கு தெரியாது. அதனால் அவர்கள் தொழிற்சங்கங்களின் பிரச்னைகளை மட்டுமே பேசுவார்கள். அவர்கள் அரசியல் காரணத்திற்காக சில கருத்துக்களை பேசுகிறார்கள். மற்ற போக்குவரத்துக் கழகத்திற்கும் ஓட்டுநர், நடத்துநர் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கினால் ஏன் ஆள் எடுக்கப் போகிறோம்? அரசியல் காரணத்திற்காக கூறலாம். அவர்களின் பார்வை வேறு, அரசின் பார்வை வேறு. பொது மக்களுக்கான நன்மை கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் தேவைக்கேற்ப இயக்கப்படும். இயக்கப்படும் பேருந்துகளுக்கு வாடகை கொடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பேச்சுக்கு சிஐடியு தலைவர் பதிலடி: இந்நிலையில் இது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதை முழுவதும் போக்குவரத்து கழகங்களே செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்த வருடம் போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்து இயக்கப் போகிறோம் என்று சொல்கின்றனர். தனியார் பேருந்துகள் இந்த மாதிரியான பண்டிகை கால நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் கோச்: இவை கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் கோச் என அழைக்கப்படும் ஒப்பந்தமாகும். போக்குவரத்து கழகத்தில் தனியாரை நுழைப்பது, படிப்படியாக தனியார் மயமாக்குவதாக மாறிவிடும். திமுக அரசு கடந்த 1967லிருந்து அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு நேர் எதிராக செயல்படுகிறது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்வோருக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
போக்குவரத்து நட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறது திமுக: போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கு பொதுவானது. எனவே அதில் வரும் நட்டத்தைப் பற்றி கவலைப்பட மாட்டோம் என்று கூறிய கட்சி, தற்போது அவ்வாறு இல்லாமல் கொள்கைக்கு எதிராக மாறுகிறது. தற்போது இருக்கும் பேருந்துகளை வைத்தே இந்த பண்டிகை காலங்களைச் சமாளிக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. ஒருபுறம் புதிய பேருந்துகளை வெளிவிடாமல் பழைய பேருந்துகளை வைத்துக் கொண்டு உள்ளது. மறுபுறம் போக்குவரத்து கழகத்தில் கிட்டத்தட்ட 25,000 காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்கள் பணத்தை அரசு செலவு செய்கிறது: தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.15,000 கோடியை அரசு எடுத்து செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களின் பணம் 25 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ளது. போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அரசுதான் ஈடு கட்ட வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அப்போதிருக்கும் ஆளுங்கட்சியிடம் விமர்சனம் செய்து அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் மறந்து விட்டு தலைகீழாக அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
தனியாருக்கு வரவை விட அதிகமாக கொடுக்கின்றார்கள்: தற்போது இந்த காண்ட்ராக்ட் கோச்சுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 32 ரூபாய் தருகிறார்கள். ஆனால் தற்போது தனியாருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 51 ரூபாய்க்கு கொடுக்கின்றார்கள். ஒரு கிலோமீட்டருக்கு 19 ரூபாய் வரவை விட அதிகமாக கொடுக்கின்றார்கள். வரவை விட அதிகமாக தனியாருக்கு கொடுக்க முடியும் என்றால் அதே பணத்தை ஏன் போக்குவரத்து கழகங்களுக்கு தரக்கூடாது? அவ்வாறு கொடுத்து போக்குவரத்து கழகங்களுக்கு ஏன் இயக்கக் கூடாது என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
சமூக நீதியை பின்னுக்கு தள்ளுகிறார்கள்: இவ்வாறு தனியாரை தமிழக அரசு ஊக்கப்படுத்திவிட்டு, அரசியல் பணத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். போக்குவரத்து கழகங்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை செய்ய மறுக்கிறார்கள். அதன் வழியாக இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றையெல்லாம் தமிழக அரசு பின்னுக்கு தள்ளுகிறார்கள். இப்படி இருக்க நீங்கள் சிஐடியு பார்த்து மக்களைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள் என்று கூறுவது சரியாகும்.
நாங்கள் எப்போது மக்களின் பக்கம் நின்று அவர்களுடைய பிரச்னைகளை பேசுகின்றோமோ அப்பொழுது அரசியல் கொள்கைகள் வருகிறது. உயர் நீதிமன்றம் சில கொள்கைகளை தொழிலாளர்களுக்கு எதிராக சொல்கிறது. அப்போது நாங்கள் அதை எதிர்க்கிறோம் அது அரசியலில் தான் சேரும் ஆனால் அதில் அரசியல் இல்லை. அரசு அரசியல் ரீதியாக தவறு செய்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் தவறு செய்கிறார்.
அவருடைய கொள்கைகளை அவர்களே மீறுகிறார்கள். அவர்களே அவர்கள் போட்ட பாதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதை நாங்கள் சுட்டிக்காட்டினால் எங்கள் மீது கோபமும் கடுமையான விமர்சனங்களையும் வைக்கின்றார்கள். அமைச்சர் சிவசங்கர் அப்படி பேசுவது சரியல்ல" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்