தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ஒரு நாள் சோழப் பேரரசு சுற்றுலா நேற்று நடைபெற்றது.
இச்சுற்றுலாவை தமிழ் பல்கலைக்கழக மேனாள் முதன்மையர் முனைவர் தெய்வநாயகம் சோழர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி துவக்கி வைத்துள்ளார். வரலாற்று அறிஞர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செல்வராஜ் அவர்கள் வழி நடத்தினார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுலா தஞ்சாவூர் பெரிய கோயிலில் தொடங்கி, சோழப் பேரரசின் சிறப்பு வாய்ந்த இடங்களான திருப்பழனம், திருவைகாவூர், திருப்புறம்பியம் போர்க்களம், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்முறை விளக்கம், திருவலஞ்சுழி, தாராசுரம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம் பஞ்சவன் மாதவி பள்ளிப்படை கோயில் பழையாறை மாட கோயில் மற்றும் சோமநாதர் கோயில், உடையாளூர் கைலாசநாதர் கோயில், புள்ளமங்கை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு மீண்டும் தஞ்சை பெரிய கோவிலில் முடிவு பெற்றது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு!
இதில், சோழப் பேரரசின் ஆட்சி முறை, கட்டிடக்கலை, சிற்பக்கலை, போர்கலை, வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, சமய வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மைய செயலாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பழையாறை நகரின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்