தமிழ்நாடு/சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்திரை மாதம் பிறந்தது முதல் திருவிழாக்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பூச்சொரிதல் திருவிழா, கும்பாபிஷேகம், கம்பம் திருவிழா என நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த கோயில் திருவிழாக்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.
சிக்கரசம்பாளையம் சசால மாரியம்மன் கோயிலில் 'கம்பம் திருவிழா': ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் சசால மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுதலுடன் தொடங்கி இன்று சித்திரை மாதம் கம்பம் திருவிழா நடைபெற்றது. இதில், கிராமத்தின் நன்மை வேண்டி, பல பூஜைகள் செய்யப்பட்டது. கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த இக்கம்பத்தைச் சுற்றிலும், மேளதாள இசைக்கு ஏற்ப இளைஞர்கள் 'கம்பத்தாட்டம்' ஆடி மகிழ்ந்தனர்.
வேப்பிலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் உள்ள ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் மற்றும் தேர் பவனி விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பெண்கள் கைகளில் பூ தட்டுகளை ஏந்தி, தாரை தப்பட்டைகள் மற்றும் செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அம்மனை வழிபட்டனர். பல்வேறு வேடமிட்டு விதவிதமாக மின் அலங்கார ரதத்தில் அம்மன் தேர் பவனி நடைபெற்றது.
திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் தெரு, அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பம்பை வாத்தியங்கள் முழங்கக் கோயிலுக்குச் சீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, கோபுர விமானத்தின் மீது இருந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்: தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகியுடன் தேரில் எழுந்தருளச் சிவ வாத்தியங்கள் முழங்க ராஜ வீதிகளில் நடந்த இந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'தியாகேசா..ஆரூரா..'என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival