சென்னை : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் ஆகஸ்ட் 28ம் தேதி மகாவிஷ்ணு மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களை பேசிய விவகாரம் பெரும் பேசு பொருளாகியது.
இதனையடுத்து மகாவிஷ்ணு காவல்துறையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் நேரடியாக விசாரணை நடத்தி உள்ளார்.
அப்பொழுது மகா விஷ்ணுவை பரிந்துரைத்தது யார் என்றும், நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
அதில், முதன் முதலில் மகாவிஷ்ணுவை பள்ளிக்கு அழைக்கலாம் என்று பரிந்துரை செய்தது யார்? தலைமை ஆசிரியர் யாரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் இதற்கான அனுமதி பெறப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளியில் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை ஒப்படைக்க திட்டம் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Mahavishnu Spiritual speech issues