சென்னை: இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சமீபத்தில் கனடாவின் டொரண்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றார். 17 வயதான குகேஷ், இந்த வெற்றியின் மூலம் இளம் வயதிலேயே வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தது மட்டுமல்லாது, செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு விளையாடும் இரண்டாவது வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
முன்னதாக, ரஷ்ய செஸ் ஜாம்பவான் சேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984ஆம் ஆண்டில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் தகர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கனடாவில் இருந்து சென்னை வந்த குகேஷிற்கு அமோக வரவேற்பை பொதுமக்கள் மற்றும் அவர் படித்த வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இருந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்ற குகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான காசோலையையும் வழங்கினார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இது குறித்து இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கூறுகையில், "தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையும், போட்டி முடிந்த பிறகு பரிசுத்தொகையும் உடனடியாக வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் தான், என்னால் தற்போது இந்த சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடிந்தது” என்று கூறி நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்? எல்எஸ்ஜியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபரா வெற்றி! - LSG Vs RR