மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது. சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து சிறுத்தையைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை ஆரோக்கியநாதபுரம், தூக்கணாங்குளம் பகுதியில் உள்ள கருவேலங்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மீது உறங்கிய நபர் ஒருவர் சிறுத்தை நடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறி உள்ளார். அதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர்.
மேலும், சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து 3 ராட்சச கூண்டுகள், வலைகள் மற்றும் வனத்துறையினருக்குப் பாதுகாப்பு உடைகள், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டது. மேலும், காட்டுப்பகுதியில் வலைகள் கட்டி மூன்று ராட்சச கூண்டுகளும் வைக்கப்பட்டன. கருவேலங்காட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில் 3 ஆம் நாளான நேற்று(ஏப்.5) சித்தர் காடு பகுதியில் ஆடு ஒன்றைச் சிறுத்தை கடித்துக் குதறிய நிலையில் ஆடு இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தைக் கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், கால்தடங்கள் இல்லாததால் உறுதியாகச் சொல்லமுடியாது என்றும், பிரேதப் பரிசோதனை அடிப்படையில், உண்மையான தகவல் தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம், கருவேலங்காடு பகுதியில் நேற்றிரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஏப்.6) காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள குட்ஸ் யார்ட் நடைமேடையில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை கொன்றதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறுத்தையைக் கண்காணித்து அதனைப் பிடிக்கும் பணியில் திறமையாக உள்ள வனத்துறையினர் இருவரும் வந்து இறந்த ஆட்டை ஆய்வு செய்தனர். சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும், ஆட்டை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு சிறுத்தை நடமாடிய பகுதியில் தற்போது 8 மோப்பநாய்கள் மற்றும் வேட்டை நாய்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன் IFS சிறுத்தை நடமாடிய பகுதிக்கு நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்ட படம் உள்ளது. சிறுத்தைக்கு வேறு இடத்தில் கூண்டு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்".
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்குச் சதி செய்தவர்களுடன் கூட்டணி வைப்பதா? டிடிவி தினகரனை விளாசிய காயத்ரி ரகுராம்! - 2024 LOK SABHA ELECTION