திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டியானது கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தடகளம், நீச்சல், டேபிள் டென்னிஸ், கேரம், கிரிக்கெட், சிலம்பம், கூடைப்பந்து மற்றும் செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின் அட்டவணை நிலவரப்படி, நேற்றைய தினம் (செப்.16) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்ததால், தங்களது பெற்றோர் உடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மையத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், செஸ் போட்டி நேற்றைய முன்தினமே (செப்.15) நடத்தி முடிக்கப்பட்டதாக அலுவலர்கள் வீரர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவிகள் சமீரா மற்றும் யுவஸ்ரீ கூறுகையில், "திருவள்ளூரில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் செஸ் விளையாட்டு போட்டிக்கான தேதி இன்று (செப்.16) தான் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. ரூ.11.93 லட்சம் சிக்கியது!
ஆனால், நாங்கள் போட்டிக்கு சென்றபோது எங்களை உள்ளே அனுமதிக்காமல், நேற்றே (செப்.15) போட்டி முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். அதற்கான சான்றுகளைக் கேட்டாலும் தர மறுத்து சரியான பதிலும் அளிக்கவில்லை. மேலும், போட்டிக்கான தேதி மாற்றப்பட்டது குறித்து முன்னரே பள்ளி நிர்வாகத்திற்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் அறிவித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் எங்களுக்கும், எங்கள் பள்ளி நிர்வாகத்திற்கும் வரவில்லை.
இதுமட்டுமல்லாது, போட்டி நடைபெறும் இடங்களையும் மாற்றி மாற்றி கூறி எங்களை அலைக்கழித்தனர். ஆசை ஆசையாக முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் விளையாட வந்த எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நேற்று (செப்.15) நடத்தப்பட்டதாக கூறப்படும் செஸ் போட்டியை ரத்து செய்து, மீண்டும் புதிதாக செஸ் போட்டியை நடத்தி, எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி செஸ் போட்டி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த செஸ் போட்டியை மீண்டும் நடத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றினையும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.