சென்னை: சார்ஜா - சென்னை - சார்ஜா, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் (Air Arabia) பயணிகள் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 மணி நேரம் தாமதமாகச் சென்னைக்கு வந்ததால், அந்த விமானத்தில் சென்னை வந்து கொண்டிருந்த 142 பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து சார்ஜா செல்ல இருந்த 153 பயணிகள் என மொத்தம் 295 பயணிகள் தவித்தனர்.
சார்ஜாவில் இருந்து நேற்று (பிப்.10) அதிகாலை 3 மணிக்குச் சென்னை வரவேண்டிய ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 142 பயணிகளுடன் சார்ஜாவில் இருந்து பிப்ரவரி 9ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த விமானம் மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பிச் சென்று விட்டது.
அதன் பின்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 3 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 6 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தது. வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவில் இருந்து சென்னை வரும் ஏர் அரேபியா விமானம், மீண்டும் அதிகாலை 3.40 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சார்ஜா புறப்பட்டுச் செல்லும்.
இந்த நிலையில், இந்த விமானத்தில் இன்று 153 பயணிகள் சென்னையில் இருந்து சார்ஜா செல்ல இருந்தனர். அந்தப் பயணிகள் அனைவரும் நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்காகத் தயாராக இருந்தனர்.
ஆனால் சார்ஜாவில் இருந்து வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தாமதமாகியதால், அந்த 153 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். அதன்பின்பு விமானம் தாமதமாக இன்று காலை வந்ததும், சார்ஜா செல்ல வேண்டிய பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் 3 மணி நேரம் தாமதமாக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து சார்ஜா புறப்பட்டுச் சென்றது.
இதனால் சென்னையில் இருந்து சார்ஜா செல்ல வேண்டிய 153 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த அந்த விமானத்திலும், 142 பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!