சென்னை: சென்னையில் நேற்று(அக்.14) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரம்பூர், தியாகராய நகர், பெரியமேடு, அண்ணாசாலை, வடபழனி, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனையடுத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் ஆய்வு செய்தனர்.
களத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன்…#NorthEastMonsoon#ChennaiRains pic.twitter.com/BOUiruoC9m
— M.K.Stalin (@mkstalin) October 15, 2024
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணி: மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் இருந்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மழை நேரத்தில் பயன்படுத்தும் ரெயின்கோர்ட்(Rain Cot), கையுறை போன்றவை இல்லாமல் மழையில் நடந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!
மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி: கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையம் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையிலும் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள், கார்கள் பகுதியளவு நீரில் மூழ்கியபடியே பயணம் மேற்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தையில் கடும் பாதிப்பு: தொடர் கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் கோயம்பேடு புறநகர் பேருந்துகள் உள்ளே செல்லும் நுழைவாயில் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால், புறநகரிலிருந்து வரும் அரசு பேருந்துகள் வெள்ள நீரில் மிதந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
மூதாட்டியை மீட்ட காவலர்கள்: சென்னை ராமாபுரம், ராயல் நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்து 85 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் தினேஷ் குமார் ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் சுபா அருண்(SI) சுப்புரமணியன், குருபாண்டியன் ஆகியோர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
படகுகள் மூலம் மீட்பு: வேளச்சேரியில் மழை நீரால் சிக்கி தவித்த பொதுமக்களைப் படகுகள் மூலமாகவும், தீயணைப்பு வாகனங்கள் மூலமாகவும் பத்திரமாக மீட்ட காவலர்கள், அவர்களை முகாம்களிலோ அல்லது அவர்கள் செல்ல விரும்பும் உறவினர்கள் இல்லத்திற்கோ அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கனமழை: மின் விபத்துகளை தடுக்க TANGEDCO முக்கிய எச்சரிக்கை..! பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன..?
தண்டவாளங்களில் புகுந்த தண்ணீர்: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் ரயில்கள் சற்று வேகம் குறைத்து இயக்கப்படுகின்றன. இதனால் ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் சிக்னலுக்கு ஏற்றாற் போல் சற்று தாமதமாகவே ரயில் நிலையங்களுக்கு வந்தடைகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மண்ணெண்ணெய் கிடங்கின் சுவர் இடிந்து சேதம்: சென்னை ஆர்.கே.நகர், தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கின் சுற்றுச் சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.