சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.
தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் (ஜூன் 25) முடிவடைந்தது. இதனால், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை, ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அறிக்கை தயார்” - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்! - KALLAKURICHI Hooch Tragedy Report