சென்னை: 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில், சென்னையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயாராகி வருகின்றன.
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் நாளை (ஜூன்4) வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிய மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளானது, தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இரு குழு அமைத்து நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னையில் மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1,055 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் பணிகள் அனைத்தும் தொடங்குவதற்கு சென்னை தயார் நிலையில் உள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி கூறுகையில் “தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக இந்த தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் பின்பற்றப்படும். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னையில் மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நாளை 1,055 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்” எனக் கூறினார்.
மேலும், அதிகாலை 4.30 மணியிலிருந்து தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடத் தொடங்குவார்கள் என்றும், மேசையில் பணிபுரியும் அலுவலர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகள் காலை 5 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதி பிறந்தநாள்; சென்னையில் ‘கலைஞர் நினைவிடத்தில்’ மு.க.ஸ்டாலின் மரியாதை!