சென்னை: சென்னை அடுத்த குரோம்பேட்டையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு கல்லூரி மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது இன்று இரவு வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இருந்து வெகுண்டு நிபுணர்கள், சென்னை கமாண்டோ வீரர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கல்லூரி வளாகம், அறைகள், விடுதி, கேண்டின் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
பின்னர், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது. மேலும், சிட்லபாக்கம் போலீசார் மிரட்டல் இ-மெயில் வந்த ஐடியை வைத்து மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த மாதம் சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களாக தலைமைச் செயலகம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் முக்கிய கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம்; உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா