4 டிகிரி செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - September Summer - SEPTEMBER SUMMER
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published : Sep 17, 2024, 2:09 PM IST
சென்னை: தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40.3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
இன்று (செப்.17) முதல் வருகிற 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலால் கவலை வேண்டாம்.. உடலை கூலாக வைக்க இதோ சூப்பர் வழிகள்..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், தமிழக, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அடுத்த 5 நாட்களுக்கு 35 முதல் 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.