சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 15 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் கடலூரில் 14 செ.மீ, சேலம் 12 செ.மீ, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 10 செ.மீ மழை பரவலாக பெய்துள்ளது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக.10) முதல் 14ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருவண்ணாமலை ஆகிய தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (ஆக.10) முதல் 14ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ விசாரணை! என்ன காரணம்?