சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம் : வட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளதால், சோழவரம் 30 செ.மீ, செங்குன்றம் 28 செ.மீ, ஆவடி 25 செ.மீ, கத்திவாக்கத்தில் 23 செ.மீ, மணலியில் 21 செ.மீ மழை என 5 இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கடந்த அக் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் 138 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 71 மி.மீ அதிகம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு நிலை கொண்டுள்ளது? : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கே தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லுருக்கு தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு வட மேற்கு தொலைவில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில், புதுவைக்கும் - நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதனால் அடுத்த நான்கு தினங்களுக்கு வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.
நான்கு தினங்களுக்கு எங்கெல்லாம் மழை?: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழையும் பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.
சென்னைக்கு ரெட் அலர்ட் விலக்கப்படாதது ஏன்? : காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் கடலில் இருப்பதால், கரையைக் கடக்கும் பொழுது மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் ரெட் அலர்ட் திரும்ப பெறாமல் உள்ளது. மேலும், மழைக்காக மட்டுமே இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்படுவதில்லை. தாழ்வு மண்டலமானது அதில் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கும் சேர்த்து தான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 250 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேபோல் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை நோக்கி வரும்பொழுது 35 கிலோ மீட்டரிலிருந்து 45 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்