சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் குருவம்ராஜம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மதார், சர்புன்னிஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை பெற்று தரவில்லை எனக் கூறி சர்புன்னிசாவை, மதார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சர்புன்னிஷா கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து சென்னை அயனாவரத்தில் உள்ள தன் தாய் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டு வேலைகள் செய்யவில்லை என தாய் அடிப்பதாக மதாரிடம் இளைய மகள் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, மனைவியின் வீட்டுக்குச் சென்ற மதார், அவருடன் சண்டையிட்டு கத்தியால் குத்தி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதார் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிகுளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி T.H.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதம் செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன் மதார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 27 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்.. பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி!