சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக பிரமுகரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த ஆணையம், இருவர் மீதான புகாரையும் முடித்து வைத்துக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என்.செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஒவ்வொரு முறையும் வழக்கைத் தள்ளிவைக்குமாறு ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார். மேலும், இந்த வழக்கில் இன்னும் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறையின் அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.
இதனையடுத்து, காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஜெயக்குமார் மற்றும் ஜெயவர்தன் அளித்த புகார்களை முடித்து வைத்தது ஏன் என மனித உரிமை ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காவல் துறை அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், உரியக் காரணங்களைத் தெரிவித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
ஆணைய தரப்பு வழக்கறிஞர், ஜெயக்குமாருக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராகப் பொய் புகார்கள் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள், நாளை (ஏப்ரல் 02) தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே நடந்தது என்ன? - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கம் - Kachchatheevu Issue