சென்னை: சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு இன்று (ஜூன்.18) காலை இமெயில் மூலம் சென்னையில் இருந்து துபாய் நோக்கி செல்லும் எமிரேட்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டு துபாய் நோக்கி புறப்பட தயாராக இருந்த விமானம் நிறுத்தப்பட்டது.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகளின் கீழே இறக்கி வைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மூலம் விமானம் மற்றும் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு சோதனை தீவிர படுத்தப்பட்டது. தொடர்ந்து விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் ஏரியா, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல், பார்சல்கள் ஏற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நீண்ட சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் அந்த இமெயில் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து வந்தது என்றும் தெரிய வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். சுமார் 3 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் வந்த இமெயில் முகவரியை ஆய்வு செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த எமிரேட்ஸ் விமானமானது இன்று இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு புரளி காரணமாக ஏறத்தாழ 15 மணி நேர தாமத்திற்கு பின்னர் விமானம் புறப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை! புற்றுநோய் பாதித்த மனைவி உயிரிழந்த சோகத்தில் துயர முடிவு! - Assam Home Secretary suicide