சென்னை: தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக பாகிஸ்தான் செல்ல இருந்த சீன சரக்கு கப்பலில் இருந்து 2 ஆயிரத்து 560 கிலோ புகை குண்டுகள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய அபாய கெமிக்கல்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சீனாவில் உள்ள ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து ஒரு சரக்கு கப்பல் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி புறப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல், இந்திய கடல் எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும் வழியில், சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மே 8ஆம் தேதி வந்து நின்றுள்ளது.
இந்த சரக்கு கப்பல் இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாகச் செல்வதால், முறைப்படி சரக்கு கப்பலில் என்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து இந்திய சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்த சீனாவின் சரக்கு கப்பலில் என்ன இருக்கிறது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கப்பலில் கண்காணித்து ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வில், கப்பலில் ஆர்த்தோ குளோரோ வின்சிலிடன் மாலோனோ நைட்ரில் என்ற ஒருவகை அமிலம் இருப்பது தெரியவந்தது. இந்த அமிலம் மிகவும் அபாயகரமானது. கண்ணீர் புகைக்குண்டுகள் தயாரிப்பதற்கு மூலப் பொருட்களாக இந்த அமிலத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்தது. அந்த வகை அபாயகரமான அமிலம் 103 பேரல்களில் மொத்தம் 2 ஆயிரத்து 560 கிலோ இருந்துள்ளது.
மேலும், இது குறித்து சரக்கு கப்பல் நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள், 103 பேரல்களில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 560 கிலோ அபாயகரமான அமிலத்தை பறிமுதல் செய்தனர். அதோடு இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த பறிமுதல் குறித்து டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமையகம் மற்றும் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை ஆகியவற்றிற்கும் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிடிஎப் வாசனின் திருப்பதி கோயில் பிராங் வீடியோ: தேவஸ்தனம் அதிரடி முடிவு!