ETV Bharat / state

கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தால் இவ்வளவு ஆபத்தா? - சென்னை மாநகராட்சியை எச்சரிக்கும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்! - CHENNAI CORPORATION - CHENNAI CORPORATION

Kodungaiyur Incinerator Project: திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது இந்த எதி்ர்ப்புக்கு அவர்கள் கூறும் காரணங்களை இங்கு காண்போம்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு
கொடுங்கையூர் குப்பை கிடங்கு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 7:41 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியானது 'ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்' என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப்பை எரிவுலைகளை’ கொடுங்கையூர் பகுதியில் நிறுவத் திட்டமிட்டுள்ளது.

சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், சென்னை மாநகரின் திருவொற்றியூர் முதல் அண்ணா நகர் வரையிலான எட்டு பிரிவுகளின் எல்லா திடக்கழிவுகளையும், தென்சென்னையை உள்ளடக்கிய எஞ்சிய ஏழு பிரிவுகளின் மட்காத கழிவுகளையும் கையாளவிருப்பதாக ஒப்பந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இவ்வகையில் இந்தத் திட்டத்தின் மூலமாக வடசென்னையில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளில் தோராயமாக 500 மெட்ரிக் டன்கள் நெகிழி உள்ளிட்ட 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் எரித்து அழிக்கப்படவிருக்கின்றன.

கழிவிலிருந்து மின்சாரம் எப்படி?: திடக்கழிவுகளில் கலந்திருக்கும் அதிக எரிதிறன் கொண்ட நெகிழி, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை பயன்படுத்தி, பாய்லரில் இருக்கும் நீரைக் கொதிக்கச் செய்து நீராவியாக்கி அந்த எரிசக்தியை மின்சாரமாக மாற்றுவதையே கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு என்கிறார்கள்.

கழிவுகள் எரித்தலை பொதுமைப்படுத்தி சாம்பலாக்குதல் (incineration) என்று சொன்னாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து பைராலிசிஸ், கேசிபிகேஷன் என்ற பல பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.

திடகழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதென்பது அறிவியல்ரீதியாக நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இதனால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள். இதுதொடர்பாக, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ம.ஜீயோ டாமின், ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்த திட்டம் ஏன் அபாயகரமானது? கழிவுகளிலிருந்து மின்சாரம் என்ற சொல்லாடல் கேட்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இது மிக மோசமான பின்வரும் சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

அதிகரிக்கும் காற்று மாசுபாடு: திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரிவுலைகளில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும்கூட டயாக்சின்கள், பியூரான்கள் உள்ளிட்ட மிகமோசமான பல்வேறு நச்சு வாயுக்கள் இதிலிருந்து வெளியேறுகின்றன.

மேலும் நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய நச்சான பாதரசம், புத்திக்கூர்மையை பாதித்து நடத்தைகளைப் பாதிக்கும் ஈயம் (Lead), கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சலை உருவாக்கி சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகின்றன.

மாசுபடும் நீர், நிலம்: இவை மட்டுமின்றி, குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழலேரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் கலப்பதோடு வீடுகளிலும் அருகாமை உணவகங்களிலும் தயாராகும் உணவுப் பொருட்களையும்கூட மாசுபடுத்தக்கூடியவை. தரையில் படியும் நச்சுக்களும் மழைநீரோடு கலந்து நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது.

நச்சுத் திடக்கழிவு எச்சங்கள் உருவாக்கம்: குப்பை எரிவுலைகள் எல்லா குப்பைகளையும் எரித்து அழித்துவிடுபவைபோலத் தெரிந்தாலும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை எச்சமாக உருவாக்குகின்றன.

தூண்டப்படும் காலநிலை மாற்றம்: கொடுங்கையூர் குப்பை எரிவுலையில் 2,000 மெட்ரிக் டன்கள் குப்பையை எரிப்பதன் மூலம் சுமார் 3,400 மெட்ரிக் டன் கார்பனை ஒவ்வொரு நாளும் உமிழும் அபாயம் உள்ளது. இது 10 லட்சம் கார்களின் உமிழ்வுக்கு சமமாகும். 'சென்னை காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை அறிக்கை’யானது (CCAP) குப்பை எரிவுலைகள் மிக அதிக கார்பன் உமிழ்வை உள்ளடக்கியவை என்றும், ஆகவே தவிர்க்கப்பட வேண்டியவை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையும் கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டமானது மிக அதிகக் கார்பன் உமிழ்வை உருவாக்குவது என்று குறிப்பிடுகிறது. ஒரு சராசரியான நிலக்கரி மின்னிலையத்தைவிட குப்பை எரிவுலையானது 65 விழுக்காடு அதிக கார்பன் உமிழ்வுக்குக் காரணமாக இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை மேலாண்மையை சிதைக்கும் எரிவுலைகள்: சூழலுக்குப் பாதுகாப்பான ‘கழிவில்லாமையை’ (zero waste) இலக்காகக்கொண்ட குப்பை மேலாண்மையானது குப்பைக் கிடங்குகள் இல்லாத நிலையை (zero landfill) இலட்சியமாகக் கொண்டிருப்பதோடு குப்பையை அதன் உருவாக்கத்திலேயே குறைப்பதை (Refuse / Reduce) முதன்மைப் படிநிலையாகவும் மறுசுழற்சி போன்றவற்றை இரண்டாம் கட்டமாகவும் உள்ளடக்கியிருக்கிறது.

ஆனால், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சூழலில், அதற்கு ஒவ்வொரு நாளும் நல்ல எரிதிறன்கொண்ட நெகிழி உள்ளிட்டக் கழிவுப் பொருட்கள் கிடைப்பது அவசியமாகிறது. ஆகவே இது ஒட்டுமொத்த குப்பை மேலாண்மையையும் சிதைத்து குப்பைகளின் அளவை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

உதாரணமாக, PET புட்டிகள் நல்ல சந்தை மதிப்புடைய ‘குறைசுழற்சி’ (Downcycling) மூலம் பாலியெஸ்டர் இழைகளையும் ஆடைகளையும் உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள நெகிழிப் பொருட்களாகும். இந்த திட்ட ஆவணமானது PET புட்டிகளையும் எரிப்பதை உள்ளடக்கியதாக இருப்பதன் மூலம், மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளைக்கூட எரித்துக் கரியாக்கி இயற்கை வளங்களை வீணடித்து அவற்றின் தேவையையும், அதனால் ஏற்படும் உமிழ்வையும் மறைமுகமாக இவை அதிகரிக்கின்றன.

திட்டம் நிறைவேறுமா?: மாநகராட்சியானது தொடர்ந்து குப்பைகளை வகைபிரித்துப் போடுவதற்கு பொதுமக்களை வலியுறுத்தி வந்தாலும்கூட, குறைந்தபட்சமாக மட்கும் கழிவுகளை முழுமையாக மட்கச் செய்யும் உட்கட்டமைப்புகள்கூட அதனிடம் இல்லை என் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் CCAP அறிக்கையானது, சென்னையின் குப்பை மேலாண்மையானது கடும் போதாமைகள் நிரம்பியதாகவும் மிகமோசமான இலக்குகள் கொண்டதாகவும் இருப்பதை வெளிப்படுத்துகிறது. சென்னை உட்படத் தமிழ்நாடு முழுதும் அமைக்கப்பட்டிருக்கும் கழிவிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் 47 நிலையங்களில் வெறும் பத்து மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன.

குப்பைகளை மறுசுழற்சிக்காக வகைபிரிக்கும் நிலையங்கள் போதுமானவையாக இல்லை. இருக்கும் நிலையங்களும் முழுமையான செயல்பாட்டில் இல்லை. சூழல் நெருக்கடிகளும் காலநிலை மாற்றமும் உச்சம் பெற்றுவரும் காலத்தில், சூழலுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான, கார்பன் உமிழ்வற்ற, குப்பை மேலாண்மையைத் தேர்ந்தெடுப்பதே விவேகமான செயலாகும். இந்தப் பின்னணியில், சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமையவிருக்கும் அபயாகரமான கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.ஜீயோ டாமின் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா காப்புரிமை விவகாரம்; பேராசையில் பணம் கேட்பதா? - சீமானின் கருத்து என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.