சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் 20 செமீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அவசர கால கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கணைப்பாளர் ராஜேஷ்வரி ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐஓடி டிவைஸ் (IoT device), சென்சார் ப்ளட் கேமரா (flood cam), ப்ளட் சென்சார் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தயார் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள்: ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீர் செல்லும் பொழுது, அதனை துள்ளியமாக கண்காணித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வருகிறோம். தகவல் தெரிவித்தவுடன் பாதிப்படைந்த இடத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி ஊழியர்கள், தேங்கி நிற்கக்கூடிய மழை நீரை மோட்டார்கள் மூலமாக வெளியேற்றும் பணியில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர உதவி எண் 1913: சென்னை மாநகராட்சியின் அவர உதவி எண் 1913, சென்னை மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு கால் சென்டர் உடன் இணைக்கப்பட்டு, பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர கட்டுப்பாட்டு கால் சென்டரில் ஒரு ஷிப்ட்க்கு 150 பணியாளர்கள் பணியில் இருப்பதினால் 24 மணி நேரமும் முழுமையாக இயங்கி வருகிறது. அவசர உதவி எண் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை உடனடியாக பதிவு செய்து, இது தொடர்பான அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
Dear #Chennaiites,
— Greater Chennai Corporation (@chennaicorp) October 7, 2024
If you have any grievances to be addressed by the Greater Chennai Corporation, please contact us via the #GCC helpline at 1913.#ChennaiCorporation#HereToServe pic.twitter.com/nvwLSgKEax
இதையும் படிங்க: மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?
Early warning system : மழை பாதிப்பு தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் தொடர்பு கொண்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதையும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்கென்று தனிக்குழு செயல்படுகிறது. அத்துடன், புதியதாக 72 மணி நேரம் முன்னறிவிப்பு (forecast), வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து இயர்லி வார்னிங் சிஸ்டம் (Early warning) என்ற புதிய செயலியை (app) உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், எந்த இடத்தில் எவ்வளவு மழை துல்லியமாக பெய்யும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், பொதுமக்களுக்கு எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில், மண்டல அலுவலர்களுடைய தொடர்பு எண், மாநகராட்சி பணியாளர் தொடர்பு எண் ஆகியவற்றுடன் அந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது? எவ்வளவு மழை வரும்? என்பதையும் மக்கள் எளிதாக அப்ளிகேஷன் மூலமாக அறிந்துக்கொள்ள முடியும். தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான முகாம்கள், உணவகங்கள், தேவையான படகு, தன்னார்வலர்கள் இருக்கக்கூடிய தகவலையும் சேர்த்து இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த, செயலி 2 நாட்களில் தயார் செய்யப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது. மின்சார துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அனைவரும் ஒருங்கிணைந்த இந்த கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயங்கி வருகிறோம். அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் புகார் அடிப்படையில் என்ன தேவை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு புகார் குறித்த தகவலை தெரிவித்து, சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்