சென்னை: கடந்த ஜூலை 10 ஆம் தேதி சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
இதில் நாய்களின் பாலினம், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன. சென்னையில் 2018-ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,81,347 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சிறுவனின் கையை குதறிய தெரு நாய்: சென்னை மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!
இதில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டங்களில் தெருநாய்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகபட்டமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980 தெருநாய்களும் ஆலந்தூர் மண்டலத்தில் 4875 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக தெரு நாய்கள் விபரம்:
சென்னை மாநகராட்சி மண்டலம் | தெரு நாய்களின் எண்ணிக்கை |
திருவொற்றியூர் | 11,957 |
மணலி | 7,101 |
மாதவரம் | 17,096 |
தண்டையார்பேட்டை | 12,681 |
ராயபுரம் | 8,542 |
திரு.வி.க.நகர் | 12,684 |
அம்பத்தூர் | 23,980 |
தேனாம்பேட்டை | 7,642 |
அண்ணாநகர் | 12,096 |
கோடம்பாக்கம் | 8,702 |
வளசரவாக்கம் | 14,154 |
ஆலந்தூர் | 4,875 |
அடையார் | 10,782 |
பெருங்குடி | 11,680 |
சோழிங்கநல்லூர் | 16,195 |
கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7 ஆயிரத்து 165 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் சுற்றித்திரியும் மாடு, எருமை, நாய்கள் உள்ளிட்டவைகள் அடிக்கடி மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அவற்றை தடுக்க உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்