சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. மேலும், ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் இந்த இதய அறுவை சிகிச்சையில் சிறிய ரோபோ கைகள், உயர் வரையறை 3டி கேமரா ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இது திறந்த இதய அறுவை சிகிச்சையை விட பல வகையில் மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, "அப்போலோ மருத்துவமனை, சுகாதார சேவைகளின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் இதய நோய் சிகிச்சையிலும் ஒரு மைல்கல்லாகும்.
இத்தகைய மேம்பட்ட நடைமுறைகளை கொண்ட ரோபாேடிக் அறுவை சிகிச்சை அளிக்கும் முறையை விரிவுபடுத்த உள்ளோம். வரும் ஆண்டுகளில் 1000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ரோபோடிக் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தவில்லை. மருத்துவ உபகரணங்களுக்கு 45 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கின்றனர். எனவே அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் எம்.எம்.யூசுப் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் 500 ரோபோடிக் இதய சிகிச்சை செய்துள்ளோம். ரோபோ உதவியுடன் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை மூலம், விரைவாக குணம் அடைதல், குறைந்த வலி ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் நோயாளியின் சிகிச்சை அனுபவம் உண்மையிலேயே சிறப்பாக மாறுகிறது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 1,000 இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..நிம்ஸ் மருத்துவமனை சாதனை!
இந்த இதய சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் குறிப்பாக 30 முதல் 60 வயதுடைய நோயாளிகளுக்கு அதிக அளவில் பயன் அளிக்கும். அவர்கள் விரைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிப் பணிகளை மேற்கொள்ளலாம். பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட கணிசமாக, மிக துரிதமாக குணமடையும் பலனையும் இது வழங்குகிறது.
ரோபோடிக் அறுவை சிகிச்சையின் செலவு பாரம்பரிய முறைகளை விட அதிகமாக இருக்கும். ஆனாலும், குறைந்த காலமே மருத்துவமனையில் தங்கியிருப்பது, விரைவான முறையில் குணம் அடைதல் ஆகியவை நோயாளிகளுக்குப் பயன் அளிக்கும்.
மேலும், இதன் மூலமாக கரோனரி தமனி பைபாஸ் கிராப்ட் சர்ஜரி மற்றும் இதய வால்வு சிகிச்சை போன்றவற்றை செய்கிறோம். இருதய பாதிப்புகள் வராமல் இருப்பதற்கு வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவு பழக்க வழக்கம் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்