சென்னை: முப்படைகள் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு உயரிய கவுரவம் வழங்கப்படும். இந்த நாளில் அதிகாரிகளை வாகனத்தில் அமர வைத்து கயிறுமூலம் அவர்களின் வாகனத்தை அவர்களின் ஜீனியர்கள் இழுத்துச் செல்வார்கள். ஆனால் இத்தகைய கவுரவம் மோப்பநாய் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீசருக்கு மரியாதை: சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சீசர் என்ற மோப்பநாய் 8 ஆண்டுகள் பணிக்கு பின்னர் இன்றுடன் (30.08.2024) ஓய்வு பெற்றது. இதனையடுத்து சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் சீசர் மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற சீசருக்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து,சீசருக்கு கேக் வெட்டி, சிவப்பு கம்பளம் விரித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி, வாகனத்தை கயிறு கட்டி இழுத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் விமான நிலையங்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரையிலும் மோப்பநாய்களின் பங்களிப்பு இன்றியமையாதது என கூறினார். சென்னை விமானநிலையத்தைப் பொறுத்தவரையிலும் 9 நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில், சீசர் என்று அழைக்கப்படும் ஆண் லேப்ரடார் நாயானது அதன் சிறப்பான பணித்திறனுக்காக நினைவு கூரப்படும் என தெரிவித்தார்.
தேசத்திற்காக 8 ஆண்டுகள் பணியாற்றிய இந்த நாய் இன்று ஓய்வு பெற்றுள்ளது என குறிப்பிட்ட அவர், சதிச்செயல் தடுப்புதான் இந்த சீசருக்கு வழங்கப்பட்ட முக்கியப் பணி எனவும், விமான நிலைய பாதுகாப்பில் தாங்கள் சந்தித்த சிக்கலான தருணங்களைக் எதிர்கொள்ள சீசர் முக்கிய பங்காற்றியது என குறிப்பிட்டார்.
அதாவது விமான நிலையத்தில் பயணிகள் யாரேனும் தங்களின் லக்கேஜை தவறவிட்டுச் சென்றால், அதில் ஒன்றும் ஆபத்தான பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்ய சீசர் உதவியது என அவர் குறிப்பிட்டார். சீசருக்கு பதிலாக தற்போது பணியில் இணைந்திருக்கும் பெண் நாயான யாழினியும் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், வருங்காலத்தில் இதனிடமிருந்து சிறப்பான பணியை எதிர்பார்க்கலாம் எனவும் டிஐஜி அருண் சிங் கூறினார்.
8 ஆண்டுகள் பணி: சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8 வருடம் 6 மாதங்களாக லாப்ரடர் (Labrador ) என்கிற வகையை சேர்ந்த சீசர் என்கிற மோப்ப நாயை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
சீசர் மோப்ப நாய்: சீசர் மோப்ப நாய் கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, ஒரு வருடங்கள் காசியாபாத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நாய்கள் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு சேர்க்கப்பட்டு, விமான நிலையத்தில் துல்லியமாக வெடி பொருட்களை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளது.
போய் வாடா சீசர்: இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வந்த சீசர் மோப்ப நாயின் வெற்றி பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, 8 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வு பெறும் சீசர் மோப்ப நாய்ய்க்கு பதிலாக யாழினி எனப்படும் மோப்பநாய் இன்று முதல் சென்னை விமான நிலைய பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மோப்ப நாய் யாழினியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
யாழினி மோப்ப நாய் பிரிட்டிஷ் நாட்டு வகை சார்ந்த லாப்ரடர் ரெட்ரீவர்(Labrador Retrieve) நாய் ஆகும். ஒன்பது மாதம் வயதான யாழினி மோப்ப நாய்க்கு ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் கடந்த ஆறு மாத காலம், வெடி பொருட்கள் கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல், தீவிர வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை செய்வதற்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று யாழினி மோப்ப நாய் சென்னை சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதன் பணியை அது தொடங்கும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்