சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று கடந்த ஜூலை 20 ஆம் தேதி அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ராஜா (35) என்ற பயணி சுற்றுலா பயணி விசாவில் துபாய்க்கு போய்விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். இந்நிலையில் அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில், அவரை நிறுத்தி, அவருடைய உடைமைகளையும் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவருடைய பைக்குள் காப்பி மேக்கர் என்ற, உடனடி காபி தயாரிக்கும் மிஷின் ஒன்று இருந்துள்ளது. அதை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்து பரிசோதித்துள்ளனர். அப்போது அதனுள் இரண்டு தங்க கட்டிகளை மறைத்து, வைத்திருந்ததை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த இரண்டு தங்கத்தின் மொத்த எடை சுமார் 4 கிலோ இருக்கும் நிலையில், அதன் சர்வதேச மதிப்பு சுமார் 2.61 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயனியை கைது செய்து, தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவத்திற்கும், ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் 167 கோடி ரூபாய் மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தி வந்த விக்னேஸ்வர ராஜாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அந்த கடத்தலுக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இப்போது கைது செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வர ராஜா, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விக்னேஸ்வர ராஜாவை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதோடு தேவைப்பட்டால் சுங்கத் துறை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மதுரை பள்ளி மாணவன் கடத்தல்; ஐஏஎஸ் அதிகாரி மனைவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை கடிதம் வெளியானது!