சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வெடிகுண்டு வழக்குகள், நக்சலைட் தொடர்பான வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
தடா வழக்குகளுக்கான இந்த சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 1990 மற்றும் 1991ம் ஆண்டு சென்னை கியூ பிரிவு காவல்துறையால் தடா சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வெடிகுண்டு வழக்குகள், சிவகங்கை கியூ பிரிவு காவல்துறையால் தடா சட்டத்தின் கீழ் 1991ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு, திண்டுக்கல் கியூ பிரிவு காவல்துறையால் 1991ல் தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன.
சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பலருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிடிவாரண்டுகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த வழக்குகள் 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் தரப்பில், நீதிமன்றத்தின் பிடிவாரண்டை அமல்படுத்த கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவிலில் சினிமா நடனம் ஆடலாமா? திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஊழியர்கள்.. கோர்ட் அதிரடி உத்தரவு!
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல முறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், 32 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை.
இது குறித்து டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த 5 வழக்குகளில் சம்மந்தப்பட்ட கியூ பிரிவு ஐஜிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் (1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சம்மந்தப்பட்ட ஐஜி நவம்பர் 29ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்