சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட்டில் பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (பிப்.21) நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மானாமதுரை வட்டாட்சியர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் ஆலை அமைப்பதற்காக கருத்து கேட்கப்பட்டதில், ஒருமானதாக அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆலை வரக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். ஆலை நிறுவப்பட்டால், அதனால் புற்றுநோய், தோல் நோய் உட்பட பல விதமான நோய்கள் வரும் என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், விருதுநகர் மாவட்டம் முக்குலத்தில் இதேபோன்ற தொழிற்சாலை அமைந்ததால் பல்வேறு நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு 160 பேர் இறந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கு தொடர்பே இல்லாத வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளியூரைச் சேர்ந்த நபர்களும் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர்களை ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆலை நிர்வாகத்தினரே கூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்த முறைகேடாக கருத்தை பதிவு செய்ய வந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் எதிரொலி.. இந்தியர்களின் கச்சத்தீவு திருவிழா பயணம் ரத்து!