சென்னை: கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. அதன் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளாக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுகவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும், அவரின் சகோதரர்களான மொய்தீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்தே ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, சென்னை மண்டல போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரின் வீட்டில் சம்மன் ஒன்றை ஒட்டிச் சென்று இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.28) மதியம் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று மாடி கொண்ட வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 8 மணி நேரம் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியது. மேலும் ஜாபர் சாதிக், எந்தெந்த திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார்? என்ன தொழிலில் முதலீடு செய்து உள்ளார்? யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், நேற்று (பிப்.28) இரவு அவரது வீட்டில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும், அவரது செல்போன் இணைப்புகளை வைத்து தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், அவருடன் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு மருத்துவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை; 6 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!