சென்னை: பெருங்குடியில் செயல்பட்டு வரும் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று(மார்ச்.15) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
மத்திய போதைப் போருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் முழுமையான சோதனைக்குப் பிறகு எவ்வளவு மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எந்த மாதிரியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் டெல்லியில் வைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் தொழிலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
பின்னர், ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த சதானந்தன் என்பவரை நேற்று முன்தினம்(மார்ச்.12) சென்னையில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான சென்னை குடோனில் வைத்துத்தான் உணவுப் பொருட்கள் பெயரில் போதைப் பொருட்களைப் பொட்டலங்கள் செய்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஜாபர் சாதிக் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை ரூ.2000 கோடிக்கு மேல் போதைப் பொருட்களைக் கடத்தியதும் தெரியவந்துள்ளது. அதன் மூலம் ஈட்டிய வருவாயைத் திரைப்படங்கள் தயாரிப்பு கட்டுமான பணிகள் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்; நிலுவைத்தொகையை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!