- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 'நான் முன்னேற்றமடைந்த பாரதத்தின் தூதர்' (விக்ஷித் பாரத் அம்பாசிடர்) (VIKSIT BHARAT AMBASSADOR) என்ற திட்டத்தைக் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், "எல்லா விதமான மாணவர்களும் படிக்க வேண்டும். அவர்களுக்கு உகந்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏறக்குறைய இலவச கல்வி அடிப்படையில் படித்து முடித்து வெளியே சென்று வேலை கிடைக்கக்கூடிய நல்ல கல்வி அமைப்பை ஆரம்பித்த ஐசரி கணேஷ்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் படித்த காலங்களில் உள்ள நிலைக்கும், இப்பொழுது உள்ள நிலைக்கும் மிக அதிகமான வித்தியாசங்கள் உண்டு. அனுபவங்களைப் பொறுத்தவரை அப்பொழுதும் ஒன்றுதான் இப்பொழுதும் ஒன்றுதான். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய பாரதத்தில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு குடிமகன்களும் உழைத்தார்கள். அதற்கு இந்த அரசு உதவி செய்து வருகிறது. இந்தியாவிலேயே கோயம்புத்தூரில் இறக்குமதியில் மிகச்சிறந்த முறையில் உபரி பொருட்களைச் செய்து வருகிறார்கள்.
கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே துப்பாக்கி தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட்டது. ஆனால் இது ஒரு பேருக்கு நடைபெற்று வந்தது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஏன் முன்னேற்றம் அடையவில்லை என்று கடந்த 2014 ஆம் ஆண்டு என்னிடம் கேள்வி கேட்டார்கள். ஆனால் இன்று பெரிய பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு பெரிய அளவில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி இங்கே பத்தாண்டுகளில் 'டிபென்ஸ் காரிடார்' (defense corridor) என்ற திட்டத்தைக் கொண்டு வந்ததால் இன்று கப்பல் துறை இந்தியாவில் மிகச்சிறந்த நிலைமையை அடைந்துள்ளது. உலகில் எங்குமே இல்லாத அளவிற்கு நமது நாட்டில் தனியார் விமானச் சேவைகள் அதிகப்படியாக உள்ளது.
600க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்னும் அதிகமாகக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. சின்ன, சின்ன ஊர்களிலிருந்து அனைவரும் எளிதில் செல்வதற்கு 'ஊடான்' (udan) என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்ததால் நமது மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் நாம் தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். இதற்கு தேவையான அனைத்து திறன் பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இப்படி புதிய பாடத்திட்டத்தில் மூலமாக மாணவர்கள் திறன் பட உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 'விக்ஷித் பாரத்' (Viksit Bharat) எனப்படும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
வெளிநாடுகளில் சென்று நமது திறமையையும், உழைப்பையும் காண்பித்துச் சம்பாதித்து வருகிறோம். இதை விட்டுவிட்டு நமது ஊரிலேயே அந்த அளவுக்குச் சம்பாதிக்க வேண்டும். டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு உயர வேண்டும்.
வெளிநாடுகளில் கூட நமது தேசத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். கோவிட் காலங்களில் நாம் பெருமையோடு இருந்தோம். இப்பொழுது பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறோம். இப்படி முன்னோக்கிச் செல்வதே நமது கடமையாக இருக்கிறது.
இன்று டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ரூ.43.3 கோடி ஒரு நாளைக்குப் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதை மிகப்பெரிய அளவில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக செய்ததால் நமது நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னேறி உள்ளது.
நம்மைச் சுற்றி உள்ள நல்ல விஷயங்கள் என்னென்னவெல்லாம் நடக்கின்றதோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த முயற்சியால் வரும் 2047ஆம் ஆண்டு நமது நாடு முதலிடத்தில் வரவேண்டும்.
பிஎல்ஐ திட்டம் (Postal Life Insurance) என்பதை இங்கே கொண்டு வந்ததற்குக் காரணமே முதலீடுகளை ஊக்குவிக்கவே இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாசு இல்லாத இந்தியாவாக மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நாம் முதலில் இருக்க வேண்டும். முன்னேற்றம் அடைந்த பாரதத்தின் தூதராக நாம் இருக்க வேண்டும். வரும் 2047ஆம் ஆண்டு நீங்கள் தான் இந்த நாட்டின் பெரிய அளவிலான குடிமகன்கள், அப்பொழுது நமது நாடு திறமை உடைய நாடாக இருக்க வேண்டும்".
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் பாஜக சார்பில் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போது ஏன் பேசலாம் எனக் கேட்கலாம்.
காங்கிரஸ் தேசிய கட்சியாக அப்பொழுது இருந்தது. அவர்கள் ஏன் அப்பொழுது பதில் சொல்லவில்லை.
கச்சத்தீவு விவகாரம்: இந்திரா காந்தி இறக்கும்பொழுது இதோடு சிறிய கல் பாறை இதைக் கொடுத்தால் பிரச்னை இல்லை என்றார்கள். அப்பொழுது இருந்த கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா? தமிழ் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இது பொய் பிரச்சாரம் என்று கூறி வருகிறோம்.
இப்படி தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிராகச் செயல்களைச் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் என்று இல்லை. நாட்டினுடைய சுதந்திரத்திற்காக எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் எப்படி வேணாலும் கட்டமைத்துக் கொள்ளட்டும்.
எங்களது கட்சி என்ன எங்களுக்கு என்ன கூறுகிறது அதை நாங்கள் செய்வோம். தென் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடப் பயம் இல்லை. ஆகையால் தான் 23 இடங்களில் எங்களது சின்னத்தில் போட்டியிடத் தயாராகி உள்ளோம்.
மீனவர்களை மீட்டவர் மோடி: கடந்த 2014 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஐந்து மீனவர்களை இலங்கையிலிருந்து மீட்டு ஈரோடு கொண்டு வந்தவர் மோடி. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை எத்தனை மீனவர்களை மீட்டு எடுத்து வந்துள்ளோம் என்று என்னால் கூறமுடியும் அது எங்களின் கடமை.
ரூ.5000 கோடி எங்கே?: ரூ.900 கோடியை முன்கூட்டியே கொடுத்து வைத்துள்ளோம். இதைத் தவிர, சென்னையில் வந்த வெள்ளத்திற்கு முன்கூட்டியே ரூ.5000 கோடி வரவழைத்துக் கொடுத்தோம். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் மிக்ஜாம் புயலில் சென்னை பாதிக்கப்பட்டிருக்குமா? ஏற்கனவே கொடுக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? தமிழகம் அப்பொழுது பயங்கரவாத நாடாக இருக்கிறது என்று கூறினேன்.
போதைப் பொருள் மாநிலம் தமிழகம்: இப்பொழுது அதிக போதைப் பொருட்கள் உள்ள மாநிலமாக இருப்பது கண்ணீர் வருகிறது. இது உண்மைதான். வழக்கத்தில் கிடைக்கக்கூடிய போதைப் பொருள் எங்கிருந்து கிடைக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு குஜராத்திலிருந்து வருவது என்பது சுத்தப் பொய்.
அரசியல் கட்சிகளுக்கு வரி இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி அவர்களுடைய ஆவணங்களை ஆண்டுதோறும் சமர்ப்பிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடினார்கள் நாங்கள் பதில் கூறினோம், நீதிமன்றம் வருமானவரித்துறை கூறுகிறது சரிதான் என்று தீர்ப்பளித்தது.
தேர்தல் சமயத்தில்தான் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருக்கும் பொழுது சிபிஐ விசாரணைக்கு அழைத்தார்கள். அவர் சென்று பதில் அளித்து விட்டு வந்தார். ஆனால் இன்று கெஜ்ரிவால் எட்டு முறை கூப்பிட்டும் நீதிமன்றம் சென்று கூட வரவில்லை. அவர் ஒத்துழைக்கவும் இல்லை" என இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: “சட்டப்பூர்வமாக ஊழல் செய்வதை உலகத்திற்கே பாஜக கற்றுக் கொடுத்துள்ளது” - கனிமொழி பேச்சு! - Kanimozhi Election Campaign