சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட 58 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
திமுக சார்பில் தயாநிதி மாறன், பாஜக சார்பில் வினோஜ் பி செல்வம், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன் என பிரதான கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28), சென்னை ஷெனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மற்றும் அந்தந்த வேட்பாளர்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த வேட்புமனு பரிசீலனையின் போது, பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் அறிவித்தார். அப்போது திமுக தரப்பில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் பிரமாணப் பத்திரம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே. வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் வேட்புமனு பரிசீலனைக்கு முன்பு விவரங்களை கொடுத்து விட்டதாகவும், விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளித்துவிட்டு, பாஜக வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து. ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களின் முழு விவரங்களை இன்று (மார்ச் 28) மாலை தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிடுவார்.
மேலும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 30ஆம் தேதி அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "விஜயுடன் இணைந்து பணியாற்றத் தயார்" என்ன சொல்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்..! - O P Ravindhranath About TVK