ஈரோடு: நேற்று (பிப்.26) இரவு போட்டோ ஸ்டுடியோ ஒன்றிற்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைச் சாவகாசமாகப் பேசிக்கொண்டே திருடிச் சென்றுள்ள சிசிடிவி காட்சி ஆடியோவுடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் அடுத்தடுத்து வணிக நிறுவனங்களிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். புகைப்படக் கலைஞரான இவர் கரூர் செல்லும் சாலையில் ஸ்டுடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போலக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கடையில் இருந்த பொருட்களை எடுக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த கேமரா, மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இந்தத் திருட்டு சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய காவல்துறையினருக்குப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கடையில் இருந்த தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் இதே போன்று அருகில் உள்ள 5க்கும் மேற்பட்ட வணிகக் கடைகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில் புகைப்படக் கலைஞர் கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் இரண்டு இளைஞர்கள் சாவகாசமாகப் பேசிக்கொண்டே பொருட்களைத் திருடுவது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை மர்மநபர்கள் யார் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.